Monday, November 11, 2013

சந்தி பிழைகள்

வெள்ளை வானம் எங்கும்
கருமையாய் வெறுமையாய்
வெளிர்முகங்கள் மங்கலாய்
பசும்நிலங்கள் வெடிப்புகளாய்...

பூக்களில்லாத பூஞ்சோலைகள்
நிலவு சிரிக்காத நீலவானம்
கூவாது பறந்திடும் குயில்கள்
மெளனம் காட்டும் மழலைகள்...

நகரா நிமிட நரகங்கள்
நஞ்சாய் போனது அமிழ்தும்
ஊமையாய் போன அலைகள்
ஊர் போய் சேராத வழிகள்...

அடக்கி வைத்த கவிதைகள்
அடங்காமல் திரியும் நினைவுகள்
காற்றாய் போன உருவங்கள்
காலமாகி போன காலங்கள்..

சற்றேரக்குறைய அப்படித்தானோ
வழிந்தோடி வீணாகி வெறுமையாகி
அதுவாகவும் இதுவாகவும் இல்லாமல்
அர்த்தமுமில்லாமல் முற்று புள்ளியுடன்...

Tuesday, September 4, 2012

தனிமை தீவில்......


தனிமை தீவில்
தத்தளிக்கும் மனதில்
ஆயிரம் அலைகள்
அத்தனையும் வலிகள்...


நேற்றைக்கும் இன்றைக்கும்
நீள்கின்ற பொழுதில்
உதைபந்தாய் நினைவுகள்
அங்குமிங்கும் ஓடியபடி...


அன்றியும் யோசிக்கின்றேன்
அனாதை இதயமாய்
ஒற்றை கல்மேல்
தனிமை தவமிருந்து...


மலர்தூவிய நிமிடங்கள்
முட்கிரீடமாய் சிரசில்
பட்டாம்பூச்சி பறந்த
மனதில் கீறல்கள்...


வெளிச்சக் கீற்றின்
பிரகாச பக்கங்கள் 
இருண்டு மங்கியபடி
இறுதி யாத்திரையில்...


இலையுதிர்த்து விதவையான
மொட்டை மரங்கள்
வெறுமை போதிக்கும்
தத்துவ ஞானிகள்...


வீழ்தலும் கரைதலும்
வாழ்க்கையின் அங்கம்
எழுதலும் பிரகாசித்தலும்
மாற்றத்தின் அங்கம்...


அடிகால்களின் கட்டுகள்
அத்தனையும் அறுபடும்
இருட்டை துடைத்தெரிந்து
வெளிச்சம் தூவப்படும்...


தூரத்தெரியும் நம்பிக்கை
துணிவை தருகிறது
வாழ்வில் ஒளிபூக்கும்
வசந்தம் மறுபிறவியெடுக்கும்..

Monday, September 3, 2012

மெளனம் என்ற நகரில் ....


மெளனம் என்ற
நகரில் மோகனம் எதற்கு...
காற்றின் முகவரி
உன் கையடக்கம்...
வானின் எல்லை
நீ அடையும் இலக்கு...
கிரகணங்களை குடி
பெளர்ணமி உமிழ்...
பூ மென்மை தான்
பலரின் பார்வையில்..
அதன் மகரந்தமே கோடி
விருட்சத்தின் காரணம்...
கலங்காதே எக்கணமும்
தெளிந்த நீரோடையாயிரு...
காட்டாறு வந்தாலும் கைகட்டு
நீ கரையாத மலைசிகரம்...
ஆணாதிக்க சூறாவளியா
மிரளாதே முன்னே அடியெடு...
நீ மெல்லிய நாணல்
வளைத்தாலும் ஒடியாமல் நிமிர்வாய்...
சோதனைகள் கூப்பிடு
சவால்கள் தானே சமாளி..
உன் திறமைகளுக்கு
கைவிலங்கிடும் சமூகம்...
எதிர்த்து பார் ஒரு முறை
கைவிலங்கு தெரிக்கும்...
படிதாண்டு உலகத்தை
படித்து அறிவதற்கு...
நேரத்திற்கு கடிவாளமிடாதே
காட்டு குதிரையாய் ஓடவிடு...
அதற்கு முன் நீ
காற்றை போல ஓடு...
கூண்டுக்குள் இருக்கும் வரை
பெண்குயிலே உனக்கு சிறை...
கதவுகளே திற
உன் நம்பிக்கையே சாவி...
உலகத்தை சிறைபடுத்து
உன் திறமையை வெளிச்சமாக்கு...
உறக்க கூவிடு ஓர் முறை
மெளனம் தகர்ந்திடவே..
காற்றுக்கு சிறையில்லை
கடலுக்கு உறக்கமில்லை...
காற்றாய் கடலாய் நீ
புறப்படு எழுச்சி மலராய்...

Monday, August 27, 2012

தத்துவ போதனை....


ஆர்பரிக்கும் வெள்ளப்
பெருக்கோடு உருண்டோடிய
நதிகளெல்லாம்
வறண்டு வயோதிகத்தின்
கோடுகளை காட்டுகிறது...
வானில் மின்னுகின்ற
வைர மூக்குத்திகளான
நட்சத்திரங்கள் இன்றி
நீல வானம் கூட
மூளியாகி காட்சியளிக்கிறது...
தோட்டத்தில் கலகலவென
சிரித்து விளையாடிய
நட்டு வைத்த செடி
இப்போதெல்லாம் பூத்து
குலுங்குவதில்லை...
மேனியை மெல்லென தடவி
ஓடி விளையாடிய
தென்றலுக்கு நேரமில்லை
அனல் காற்று
ஆளை கொல்கிறது...
இனிப்பை ஊட்டி வந்த
கரங்கள் இப்போதெல்லாம்
கசப்பை கையிலேந்தி
வெறுப்பை முகத்திலேந்தி
எல்லாம் காலமாற்றம்...
ஏனிந்த தீடீர் மாற்றம்
எதற்கிந்த ஏமாற்றம்
கால தேவனின் கட்டளையா
மாற்றங்கள் மாறததென்ற
தத்துவ போதனையா...
எதிர்பார்ப்புகளின் உச்சத்தில்
ஏற்றி வைத்து
எதிர்பாரா தருணத்தில்
ஆளை ஏமாற்ற படுகுழியில்
தள்ளி புதைக்க பார்க்கிறது...
இப்போதெல்லாம் ஒவ்வோர்
நிமிடமும் அடிக்கடி
ஏமாற்ற நகருக்குள்
பிரவேசித்து பெருமூச்சு விடுகிறது
நரகமாகி போனதை உணர்ந்து...
ஆனாலும் ஏமாற்றத்தை
விரும்பியே நித்தமும் நினைத்து
வாழ ஆசைப்படுகிறேன்
வாழ்க்கையின் இனிப்பை கசப்பை
சேர்ந்து கற்று தந்தமைக்காக...

பாத்திரம் அறிந்து...




பசிக்கிறது என கையேந்திய
பிச்சைகாரனை பார்த்ததும்
சட்டை பாக்கெட்டை
தொட்டு பார்த்தேன்...
சிரித்தது இருந்த 
ஒரே ஒரு ஒற்றை
பத்து ரூபாய் தாள்...
சில கிலோ மீட்டர்
தூரம் தானே
நடந்து செல்லலாமே
பசித்த வயிறு
பசியாறட்டுமென இருந்த
பத்து ரூபாயை பிச்சைகாரனிடம்
தந்து சந்தோஷத்துடன்
நடந்தேன்..
கால் வலிக்க
சிறிது தூரம் நடந்து
சென்றதும் என்னை கடந்த
பேருந்தை பார்த்து
திடுக்கிட்டேன்...
ஜன்னலோர இருக்கையில்
அந்த பிச்சைகாரன் என்னை
பார்த்து சிரித்தபடி
பயணிக்கிறான்...

Friday, July 27, 2012

கீதாசாரம்,......


கீதாசாரம் சிரித்தது
என்னை பார்த்து...
நான் எரித்த சுள்ளிகள்
திடீர் மழையில் அணைந்தது...
நான் வளர்த்த மலர்செடி
சூரை காற்றில் ஒடிந்தது..
என்னுடையவைகள் எல்லாம்
என்னிடம் இருந்து பறிக்கப்பட்டு..
வெறுமையோடும் வேதனையோடும்
நான் தனிமையில்...
விதைப்பது மட்டும்
என் வேலை...
விளைவதும் பதராவதும்
காலத்தின் கட்டாயம்...
மறுமுறையும் பார்த்தேன்
கீதாசாரம் நம்பிக்கையூட்டியது...
எது நடக்க இருக்க இருக்கிறதோ
அது நன்றாகவே நடக்குமென்று..

Thursday, October 27, 2011

வரம் கிடைக்காதா.....


கொடுத்து விட்டதை
எடுத்து கொள்ள
நானும் பல முறை
முயல்கிறேன்...
ஒவ்வோர் முயற்சிக்கு

பின்னும் என்னில் இருப்பதில்
இன்னும் சிலவற்றை
கொடுத்தே திரும்புகிறேன்...
வள்ளல் பரம்பரையின்
கடைசி வாரிசா நான்
கடைசி வரை
கொடுத்து கொண்டேயிருக்க...
எடுத்துக் கொள்ள
எனக்கு ஓர்
வரம் கிடைக்காதா
உன்னை எனக்கென்று...

முதியோர் இல்லம்...


தாயே நீயே தெய்வம்
என்று தலைவணங்கிய
பலரெல்லாம் தலையாட்டி
கொண்டிருக்கிறார்கள்
அவரவர் மனைவிக்கு...
வீட்டில் கொலுவிருந்த
தெய்வங்கள் எல்லாம்
இன்று வீட்டைவிட்டு
வெளியேற்றப்பட்டு
முதியோர் இல்லத்தில்...Publish Post

தரகர்...


சந்தை பொருளாய் பல
ஆண்டுகளாய் காத்திருக்கும்
தன்னை திருமணம் செய்ய
யார் வருவாரென கனவுகளுடன்
காத்திருக்கும் முதிர் கன்னி - 
அவளின் தந்தையோ
இன்று அவரது ஏற்பாட்டில்
நடக்கும் நூறாவது
திருமணத்தை பார்க்க
சென்றிருக்கும் தரகர்...

நானறிவேன்...


நானறியேன்
நாளும் நாடகமாடி
நல்லுறவை கரைக்கும்
நயவஞ்சக கூட்டத்தை...


புன்னகை பூப்பூத்து
புதுஉறவை ஆரம்பித்து
வஞ்சகம் ஒளித்திட்டு
வாழ்பவர் யாரென நானறியேன்...

கைரைகை அழிய கைகுலுக்கி
கைகளில் கத்தியேந்தி
கால்களை இடற செய்பவரை
கடுகளவும் யாரென நானறியேன்

முகத்துக்கு முன் புகழாரம்
முகத்திற்கு பின் அவதூறு
ஆயிரம் நாக்குடைய மனிதர்கள்
அவர்கள் யாரையும் நானறியேன்...

பகைவர் யாரென தெரிந்தாலும்
பக்கத்தில் இருந்தே பகைதீயோடு
உதட்டில் இனிப்போடு உறவாடிய
உள்ளங்களை யாரென நானறியேன்....

ஆயிரம் பகைத்தீ மூண்டாலும்
அத்தனையும் மறைமுகமாய் வந்தாலும்
அணுவளவும் கலங்குவதில்லை
அதை எதிர்ப்பதை நானறிவேன்...

காதல் காற்று...


வீசிக்கொண்டு
வசந்த கால காற்று
வாசல் தேடி வந்தது...

பேசிக்கொண்ட
கண்கள் இரண்டும்
பேசியதென்ன என கேட்டது...

புன்னகையொன்றே
கேள்விக்கு பதிலாய்
என்னில் பிறந்தது...

ஆசையாலே
மொழி பேசும் நேரம்
மெளனம் தாழ்பாள் பூட்டியது...

வெட்கத்தாலே
முகம் சிவக்க கண்டு
தென்றல் மெல்ல சிரித்தது...

ஈரிதயம்
ஓரிதயமாய் இணைந்தது புரிந்தேன்
இணையே வாழ்கவென்று கைகுலுக்கியது...

தறுதலைப் பிள்ளைங்க

சோக்கா நான் தெரியணும்
சொக்கா புதுசா வாங்கணும்
டீசெண்ட் வளர்க்கணும்
டெனிம் ஜீன் வாங்கணும்...
நாலு எடத்துல ஒட்டு போட்ட துணியை
நாலு நாள உடுத்துறா இவங்க ஆத்தா...
காலுக்கு அழகா ஒரு ஷூ
கடன் வாங்கியாவது வாங்கணும்
நாலு தெருவுக்கு பாட்டு கேட்கணும்
நல்லதா மொபைல் போன் வாங்கனும்...
காலெல்லாம் கல்லும் முள்ளும் குத்தினாலும்
செருப்புக்கு வழியில்லாத இவன் அப்பன்...
தலைவர் படம் முதல் ஆட்டம் பார்க்கணும்
காலேஜூக்கு புதுசா ஒரு பீஸ் கண்டுபுடிக்கணும்
பக்கத்து தெரு பத்மினிக்கு பொறந்தநாளு
பரிசு வாங்கி தர பணத்தை தேத்தணும்...
காடு கழனி போய் பாட்டி சேத்து வைச்ச
பணமெல்லாம் பானைக்குள்ள பதுங்கி இருக்கு...
ஆத்தா பத்து பாத்திரம்
துலக்கினா என்ன?
ஐயன் கொளுத்தும் வெயிலில்
கொத்தனார் வேலை செஞ்ச என்ன?
பெத்த கடன் அவங்க தீர்க்கணும்
என் ஆசையெல்லாம் நிறைவேத்தணும்...

தேக்கி வைத்த வார்த்தைகள்
எல்லாம் தீபாவளிக்கு பட்டாசு
கேட்டு அழும் சிறுவனாய்
தேம்பி அழுகிறது...

அர்த்தம் இழந்த வார்த்தைகள்
எல்லாம் பெற்றோரால் கைவிடப்பட்ட
அனாதை குழந்தைகளாய்
அலைந்து திரிகிறது...

இதயம் கொட்டி வடித்த
வார்த்தைகள் எல்லாம்
செவித்திறனற்றவன் காதில் சொன்ன
கவிதையாய் உதாசினப்படுகிறது...

பார்த்து பார்த்து செதுக்கிய
வார்த்தைகள் எல்லாம்
துடைப்பம் கொண்டு பெருக்கி
தள்ளப்பட்ட குப்பையாய் சிரிக்கிறது...

அழகாய் சி்ரித்த வார்த்தைகளும்
அரசியல் தலைவரின் சிலை
போல ஆயிரம் பேர் போனாலும்
கேட்பாரற்று கிடக்கிறது...

இறந்தகாலத்தின் இனிய வார்த்தைகள்
நிகழ்கால மாற்றத்தில் சுவை
இழந்து கரும்பு சக்கையாய்
காட்சி அளிக்கிறது...

ஆங்காங்கே அழுது சிதறிக்கிடக்கும்
அத்தனை வார்த்தைகளையும்
பொறுக்கி எடுத்தேன் இதயத்தின்
ஆடியாழத்தில் எரித்து புதைத்தேன்...

எழுதாத கவிதைகள்.....




எழுதி வைத்த கவிதைகள்
அனாதை குழந்தை போல
பரணில் அடைந்து கிடக்கிறது...
எழுதி திருப்தி இல்லாத
கவிதைகள் மூலையி்ல் சேர்த்து
குளிர் காய பயன்படுகிறது...
எழுதாத கவிதைகள் எழுத
மனம் தனிமை காட்டில்
அலைந்து திரிகின்றது...
எழுதிய ஒரு கவிதையாவது
என்றாகிலும் படிக்கப்பட்டு சாபம்
தீராதாவென ஏங்கி தவிக்கின்றது...

தீபா-வலி


பற்ற வைத்ததும் ஒளிர்கின்றது
வண்ண வண்ண மத்தாப்பு...
திரியில் தீ வைத்ததும்
வெடித்து சிதறுகிறது பட்டாசு...
எரிந்து தீர்ந்ததும் கரியான
கம்பிகள் கதறுகிறது...
வெடித்து சிதறிய ஒவ்வொரு
காகிதமும் குமுறுகிறது...
ஒவ்வொரு பட்டாசிலும் யாரும்
அறி்யாமல் ஒளிந்திருக்கிறது...
கல்வி மறுக்கப்பட்ட ஏழ்மை
குழந்தை தொழிலாளிகளின் சோகம்...
கந்தக வேதிப் பொருளோடு
சொந்தமாகிய சிறார்கள்...
கைகளில் காய்ப்பெடுத்தும்
உடலிலே காயம்பட்டும்...
பற்ற வைத்த பட்டாசில்
ஏதோவொன்று வெடிக்கவில்லையா...
ஒரு குழந்தை தொழிலாளியின்
கண்ணீர் அதற்கு காரணமாயிருக்கலாம்...
உற்று நோக்குங்கள் ஒர் நிமிடம்
உண்மை உணருங்கள் அக்கணம்...