ஒரு நபர் அவரது மனைவியை எப்போதுமே புகழ்ந்துக் கொண்டிருப்பார். உன் முகராசியே ராசி தான். காலையில் உன் முகத்தில் முழிச்சா அந்த நாள் முழுக்க எனக்கு நல்ல முறையில் மகிழ்ச்சியா போகுதுன்னு வானுயர பாராட்டுவார்.
அவரது வீட்டிற்கு நண்பர்களோ, உறவினர்களோ வந்து விட்டால் போதும் மனைவி புராணத்தை ஆரம்பித்து விடுவார். என் மனைவி அற்புதமா காபி போடுவாள். அவளோட சமையலை போல வேறு யாரும் சமைக்க முடியாது என்று புகழ்ந்து தள்ளுவார்.
ஒரு முறை அந்த நபரின் நண்பர். ஏம்பா நானும் பார்க்கிறேன் இந்த ஐந்து வருடமா. அப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க- நீ பார்க்கும் வேலையில் பதவி உயர்வும் இல்லை, வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. நீ என்னடான்னா உன் மனைவியை பாராட்டி தள்ளற.
அப்படி ஒன்றும் பிரமாதமா இல்லையே, அவங்க போடும் காபியை பல முறை குடிச்சிருக்கேன், சுமாரா தானே இருக்கு, சமையலும் சாதாரண ரகம் தான். ஆனால் ஆஹா, ஓஹோ என்று பாராட்டற. எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றாராம்.
அதற்கு அந்த நபர், எப்போது எனக்கு திருமணம் ஆனதோ அன்று முதல் இன்று வரை நான் என் மனைவியை ஒவ்வொரு விஷயத்திலும் பாராட்டிட்டு வருகிறேன். இதில் பல நன்மைகள் இருக்கு நல்லா கேட்டுக்கொள் சொல்கிறேன்.
என் மனைவியோட முகத்தில் முழிச்சா அந்த நாள் நல்ல நாளா அமையும், அவளோட முகராசி அப்படின்னு சொல்றேன் எதுக்கு தெரியுமா? அப்படி அவளை பாராட்டவில்லை என்றால் தினமும் என் முகத்தில் அவள் முழிக்கறது போல நான் தான் சீக்கிரம் தினமும் எழுந்துக்க வேணும்.இப்ப பார் சி்ன்னதா ஒரு பாராட்டு அதனோட மகிமையால நான் தாமதமா தான் கண் முழிக்கிறேன்.
அவள் போடும் காபி முதல் கொண்டு அவள் செய்கிற சமையல் சுமார் ரகம், சில நாட்களில் மட்டம். அப்படி இருந்தும் பாராட்டறேன். அப்படி பாராட்டாமா போனால் இந்நேரம் அவளுக்கு பதில் நான் தான் தினமும் காபி போடறதில் இருந்து சமைக்கறது வரை எல்லா வேலைகளையும் செஞ்சு இருக்க வேண்டும். இது மட்டுமல்ல அவளை குறை கூறாம இருக்கறதால குடும்பத்தில் சண்டை சச்சரவும் இல்லை என்றாராம் சிரித்தபடி.
கேள்வி கேட்ட நண்பர் வாயடைத்து போய் வந்த வழி சென்றார் என்பது வேறு விஷயம்.
ஆம் இனியவர்களே இப்படித் தான் மற்றவர்களின் குறைகளை கூட தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் வாழ்க்கையில் தேவைப்படுகிறது. இந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதும் கூட. மற்றவர்களின் குறைகளை சாதகமாக்குவது என்பது அவர்களை அழித்து முன்னேறுவது அல்ல. அந்த குறைகளை வெளிக்காட்டாமல் சமாதான சக வாழ்வு வாழ்தலே இதன் பொருள்.
உலகத்தில் மனிதர்களின் பொதுவான குணம் எது என்று பார்த்தால் பிறரிடம் உள்ள குறைகளை கூறி அவர்களை ஏளனம் செய்வதும், தம்மிடம் உள்ள குறைகளை நினைத்து வருந்தி புலம்புவதுமே.
உலகில் குறைகளே இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை. ஐயோ நம்மிடம் இவ்வளவு குறைகளா என்று வருந்தி காலம் தள்ளக்கூடாது. நம்மிடம் ஐந்து குறைகள் என்றால் ஐம்பது குறைகளையுடைய ஐந்து கோடி பேர் கூட உலகில் இருப்பார்கள்.
அதே போல பிறர் குறைகளை ஏளனம் செய்யக்கூடாது. நம்மிடமும் குறைகள் இருக்கலாம். அதை சுட்டிக் காட்டவும் யாரோ ஒரு நபர் இருப்பார் என்பதை உணர வேண்டும்.
குறைகளை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையோடு நாம் முயலவேண்டும். அதே போல கூடுமானவரை நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தாமல் மறைக்கவும் தெரிந்திட வேண்டும்.
குறைகள் என்பது வயலில் உள்ள களைகளை போன்றது. களை உள்ளதே என்பதற்காக வயலை யாரும் அப்படியே விடுவதில்லை. அதே போல குறைகள் உள்ளது என்பதற்காக நம் வாழ்வை நாம் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. குறைகளை குறைத்துக் கொள்வதென்பது மனிதனால் இயன்ற செயலே. அல்லது குறைகளை பாராமல் இலக்கை நோக்கி உழைத்தலும் சிறந்த செயலே.
நம்மிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும், சில நிறைகள் இருக்கும். அந்த நிறைகளை கொண்டு வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அதை விட்டு அந்த நபருக்கு இதெல்லாம் உள்ளது எனக்கு இதெல்லாம் இல்லை என்று வருத்தத்திலேயே காலம் தள்ளக்கூடாது. குறைகளை குறையாக பார்க்காமல் வாழ பழகி கொள்ள வேண்டும். முடிந்தால் அந்த குறையையே நிறையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
முட்களுக்கு நடுவே முரட்டு
இலைகளுக்கு நடுவே ரோஜா மலரும்...
கண்களிழந்த குருடனும் உனக்கு
வழிகாட்டுவான் அமாவாசை இரவில்...
பூஜ்யங்களுக்கு கூட மதிப்புண்டு
அதற்கு முன் ஒன்றை சேர்த்தால்...

No comments:
Post a Comment